சம்புப் புற்தரவைக்கு தீ வைப்பு? போக்குவரத்து பாதிப்பு – வடமராட்சியில் பரபரப்பு

யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் இன்று சற்று முன்னர் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் பருத்தித்துறை பிரதேச சபையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

பருத்தித்துறை – மருதங்கேணி வீதியில், வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கும் வலிக்கண்டி பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிடைத்த தகவல்களின் படி, குறித்த பகுதியில் உள்ள சம்புப் புற்தரவைக்கு அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

பின்னர் அந்த தீ வேகமாக பரவி பாரிய தீப்பரவலாக மாறியதுடன், அதிலிருந்து எழுந்த அடர்ந்த புகை காரணமாக வீதிப் போக்குவரத்து சில மணிநேரங்களுக்கு பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பருத்தித்துறை பிரதேச சபை ஊழியர்கள் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். அவர்களின் துரித செயற்பாட்டின் காரணமாக தற்போது தீப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரட்சியான காலநிலை நிலவும் நிலையில், வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் அண்மைக்காலமாக பல இடங்களில் தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. அதிகாரிகள் பொதுமக்களை தீ தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply