யாழ்ப்பாணம் – கொழும்பு இடையிலான ரயில் சேவைகளை மீள அதிகரித்தல், நேர அட்டவணைகளை மீளமைத்தல் மற்றும் உட்கட்டமைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (20.06.2026) சனிக்கிழமை காலை நடைபெற்றது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
ரயில் சேவைகளின் அதிகரிப்பும் நேர அட்டவணை மாற்றமும்
வடக்கு மாகாணத்துக்கு பெருமளவான சுற்றுலாவிகள் வருகை தருவதாலும், பாதுகாப்பான மற்றும் நேரத்தை மீதப்படுத்தும் பயணமாக ரயில் போக்குவரத்து அமைவதாலும், கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவைகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் கூட்டத்தில் வலியுறுத்தினார். அத்துடன், பயணிகளின் வசதிக்கேற்ப தற்போதைய நேர அட்டவணைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த ரயில்வே பொது முகாமையாளர், ரயில் இயந்திரங்களுக்கான பற்றாக்குறையே சேவைகளை முழுமையாக மீள ஆரம்பிப்பதில் பிரதான தடையாக உள்ளதெனத் தெரிவித்தார். எனினும், புதிய இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்காலிகமாகச் சேவைகளை அதிகரிப்பது மற்றும் பகல் நேர ரயில் சேவைகளை ஒழுங்கமைப்பது தொடர்பில் ஆராய்ந்து துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அத்துடன், ‘யாழ். ராணி’ ரயில் சேவையில் அவசியமான மாற்றங்களை மேற்கொண்டு, அதனை வவுனியா வரை நீடிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
சரக்கு ரயில் சேவை காங்கேசன்துறை வரை நீடிப்பு
தற்போது அநுராதபுரம் வரை மாத்திரமே முன்னெடுக்கப்படும் சரக்கு ரயில் சேவையை, வடக்கு மாகாணத்தின் காங்கேசன்துறை வரை விரிவுபடுத்துமாறு ஆளுநர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரயில்வே பொது முகாமையாளர், அதற்கான துரித நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.
ஒருங்கிணைந்த பன்முகப் போக்குவரத்து மையங்கள்
போக்குவரத்து அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்கவின் வழிகாட்டலில், நாடளாவிய ரீதியில் பன்முகப் போக்குவரத்து மையங்களை அமைக்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இதன்போது தெளிவுபடுத்தினார். பஸ் மற்றும் ரயில் சேவைகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் இவ்வாறான பிரதான நிலையங்களை, வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் அமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் மற்றும் காணி விடுவிப்பு
ரயில்வே திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் பற்றைக்காடுகளாகக் காணப்படுவதுடன், சில பகுதிகளில் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பயன்படுத்தப்படாத அக்காணிகளைத் துப்புரவு செய்து, மக்களுக்கே வழங்கும் சாத்தியக்கூறுகளைப் பரிசீலிக்குமாறு ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.
யாழ்ப்பாணம் நகரிலுள்ள அன்னசத்திர வீதியை ரயில்வே திணைக்களம் மூடியுள்ளமைக்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ள கடும் அதிருப்தியை ஆளுநரும், அமைச்சர் இ.சந்திரசேகர் அவர்களும் சுட்டிக்காட்டினர்.
இதற்குப் பதிலளித்த ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதைகள் தொடர்பான ‘மாஸ்டர் பிளான்’ அடுத்த ஓராண்டுக்குள் நிறைவடையும் எனவும், அதன் பின்னரே காணிகள் மற்றும் வீதிகள் விடுவிப்புத் தொடர்பில் இறுதி முடிவுகள் எட்டப்படும் எனவும் தெரிவித்தனர்.
வடக்கு மாகாண ரயில் பாதைகள் அதிக வேகத்தில் பயணிக்கக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால், குறுக்கறுக்கும் வீதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, பிரதான வீதிகளுடன் இணைக்கும் சமாந்தர வீதிகளை அமைப்பதே விபத்துகளைத் தவிர்க்கும் சிறந்த வழிமுறை என ரயில்வே பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
மாவட்ட ரீதியான முக்கிய கோரிக்கைகள்
‘டித்வா’ பேரிடரால் சேதமடைந்து இடைநிறுத்தப்பட்டுள்ள ரயில் சேவையை, மடுத் திருவிழாவுக்கு முன்னதாக மீள ஆரம்பிப்பதற்குச் சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் பொது முகாமையாளர் உறுதியளித்தார்.
மூடப்பட்ட ரயில் கடவைகளால் மக்கள் பல கிலோமீற்றர்கள் சுற்றிச் செல்லும் நிலை காணப்படுவதால், இது குறித்துக் கள ஆய்வு செய்து சில கடவைகளை விடுவிக்கவும், ஏனையவற்றிற்கு மாற்று வீதிகளை அமைக்கவும் ரயில்வே திணைக்களம் சம்மதம் தெரிவித்துள்ளது.
மாவட்டத்தின் ஒரேயொரு புகையிரத நிலையமான மாங்குளத்தில் அனைத்து ரயில்களும் நிற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுடன், அங்கு பன்முகப் போக்குவரத்து மையமொன்றை அமைப்பதன் ஊடாக தற்போதைய காணி மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் எனப் பரிந்துரைக்கப்பட்டது.
வவுனியா மற்றும் யாழ்ப்பாணம்: பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களால் புனரமைக்கப்பட வேண்டிய வீதிகள் தொடர்பிலும் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில், இலங்கை ரயில்வே திணைக்களப் பணிப்பாளர், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர்கள், யாழ்ப்பாணம் உதவி மாவட்டச் செயலாளர், தூய்மை இலங்கைச் செயலணியின் இயக்குநர், வவுனியா மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், தொழிற்துறைத் திணைக்களப் பணிப்பாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை உயர் அதிகாரிகள், ஆளுநரின் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





