திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் கட்டாக்காலி மாடுகள் கூட்டம் கூட்டமாக நடமாடுவதால் பயணிகள் மத்தியில் அச்சமும் அசௌகரியமும் ஏற்படும் நிலை காணப்படுகின்றது.
பேருந்துகள் தரித்து நிற்கும் பகுதிகளிலும், பயணிகள் நடமாடும் இடங்களிலும் மாடுகள் சுதந்திரமாகச் சுற்றித் திரிவதைப் படத்தில் காண முடிகின்றது. இதனால் பேருந்து சேவைகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதுடன், பயணிகள், குறிப்பாக சிறுவர்கள், வயோதிபர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பிலும் கவலை எழுந்துள்ளது.
மக்கள் அதிகளவில் கூடும் முக்கியமான போக்குவரத்து மையமாக விளங்கும் திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் இவ்வாறான நிலை தொடர்வது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
எனவே, கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்தவும், அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பேருந்து நிலையத்தைப் பயணிகளுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.





