விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ எழுதியுள்ள கடிதம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போது கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மஹிந்த ராஜபக்ஷ, தனது செயலாளர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானகவிடம் குறித்த கடிதத்தை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தக் கடிதம் பின்னர் நாமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கடிதத்தில், நாமல் ராஜபக்ஷ 2010ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசிப்பதற்கு முன்னர் தன்னிடம் அனுமதி கோரிய சம்பவத்தை மஹிந்த ராஜபக்ஷ நினைவுகூர்ந்துள்ளார்.
அப்போது, அரசியலுக்கு வருவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும், ஆனால் சிறைவாசத்தையும் துன்பங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் அரசியலில் பிரவேசித்த சில காலங்களிலேயே அப்போதைய அரசாங்கத்தினால் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அந்தச் சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்திருந்ததாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, யார் எதைக் கூறினாலும் நீதிமன்றத்தின் மீது மட்டுமே முழுமையான நம்பிக்கை வைக்குமாறு தனது மகனுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தானும் தனது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் தற்போது நாமல் பிறந்த அதே நவலோக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாமலின் சகோதரர்களான யோஷித மற்றும் ரோஹித ஆகியோர் தங்களைப் பராமரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலும் தனது நிலைப்பாட்டை மஹிந்த ராஜபக்ஷ கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் அதிகாரம் கிடைக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட வேண்டாம் என நாமல் ராஜபக்ஷவுக்கு மஹிந்த ராஜபக்ஷ அறிவுரை வழங்கியுள்ளார்.
பெற்றோர் செய்யும் செயல்களுக்காக அவர்களது பிள்ளைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பழிவாங்காதிருப்பதே ராஜபக்ஷ குடும்பத்தின் வழிமுறையும் பாரம்பரியமும் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் தமது ஆட்சியின்போது வேலைவாய்ப்புகளைப் பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களில் தற்போதைய அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளும் உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல்களில் தோல்வியடைந்திருந்தாலும், நாட்டு மக்கள் நன்றியுணர்வுள்ளவர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து செயற்படுமாறு மஹிந்த ராஜபக்ஷ தனது மகனைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டை மீட்டுக் கொடுத்ததற்காகவே ராஜபக்ஷ குடும்பத்தினர் தற்போது குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இறுதியாக, ‘உங்களுக்குக் கடவுள் துணை!’ என்ற வார்த்தைகளுடன் மஹிந்த ராஜபக்ஷ தனது கடிதத்தை நிறைவு செய்துள்ளார்.
விளக்கமறியலில் உள்ள மகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தந்தை எழுதியுள்ள இந்தக் கடிதம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இதற்கிடையில், இலஞ்சம் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய வழக்கில் நாமல் ராஜபக்ஷ தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கிரிஷ் குழுமப் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் பிணை மனுக்களை நிராகரித்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், அவர்களை நவம்பர் 06ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.





