கோட்டாபய, நாமல், யோஷித! நவம்பரில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு காத்திருப்பது என்ன?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் தொடர்பான வழக்குகளில் இன்று (28) நீதிமன்றங்கள் பல முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில், எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மேலதிக மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி அவரது சட்டத்தரணிகள் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் பஸான் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து மேலதிக சிகிச்சை தேவைப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இன்றைய விசாரணையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னிலையாகாததால், அதன் நிலைப்பாட்டை நவம்பர் 4ஆம் திகதி முன்வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு மீதான உத்தரவு எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள காணியொன்றை கிரிஷ் நிறுவனத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக 100 மில்லியன் ரூபாவை கையூட்டலாகப் பெற்றதாக எழுந்துள்ள சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வழக்கு இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி சிறைச்சாலை ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு அன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மறுபுறம், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கை எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யோஷித ராஜபக்ஷவுக்கு உரிய தகுதிகள் இல்லாத நிலையிலும், அவரை ஐக்கிய இராச்சியத்திலுள்ள அரச கடற்படைக் கல்லூரியில் பயிற்சிக்காக அனுப்பியதன் மூலம் ஊழல் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான பல்வேறு வழக்குகளில் நவம்பர் மாதத்தில் அடுத்தடுத்து முக்கிய நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply