தேசிய வாசிப்பு மாதமான ஒக்டோபரை முன்னிட்டு, கிண்ணியா ரீ.பி. ஜாயா மகளிர் மகா வித்தியாலயத்தில் பாடசாலை நூலக வாரம் கடந்த 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெற்றது .
“வாசிப்போம் – கற்போம், எதிர்காலத்தை வெல்வோம்” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மாணவிகளிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல், அறிவாற்றலை மேம்படுத்துதல் மற்றும் நூலகப் பயன்பாட்டை விரிவுபடுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் பல்வேறு செயற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
நூலக வாரத்தின் முதலாவது நாளான 26ஆம் திகதி நூலக தினத்தை முன்னிட்டு விசேட காலை ஆராதனையும், நூலக வார அறிமுக நிகழ்வும் இடம்பெற்றன. அத்துடன், தரம் 9 மாணவிகள் கிண்ணியா பொது நூலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நூலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
இரண்டாம் நாளான 27ஆம் திகதி தரம் 1 முதல் 13 வரையான மாணவிகளுக்கான வாசிப்பு மூலைப் போட்டியும், மூன்றாம் நாளான 28ஆம் திகதி பல்வேறு வகுப்புப் பிரிவுகளுக்கான பேச்சுப் போட்டியும் நடத்தப்பட்டன.
நான்காம் நாளான 29ஆம் திகதி வாசிப்புப் போட்டி மற்றும் சித்திரப் போட்டி ஆகியன நடைபெறவுள்ளதுடன், நூலக வாரத்தின் பரிசளிப்பு நிகழ்வு இன்று (02.11.2026) நடைபெற்றது.
பாடசாலை நூலகக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சித் திட்டம், மாணவிகளிடையே வாசிப்புப் பண்பாட்டை வளர்த்து, கல்வி மற்றும் அறிவுசார் திறன்களை மேம்படுத்துவதற்கு வழிசமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாடசாலை அதிபர் எஸ்.ரீ . நஜீம் தலைமையில் இன்றைய பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில்,வலயக்கல்வி அலுவலக, பாடசாலை அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் பி. ஆசாத் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பரிசீல்களை வழங்கி வைத்தார்.





