கந்தளாயில் எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட விளைவு 

திருகோணமலை – கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் அனோமா சந்தியில் பிரதான நீர் குழாய் உடைந்துள்ளதால் பாவனையாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றார்கள்.

கந்தளாய் அனோமா சந்தியில் உள்ள பிரதான குழாய் சுமார் பத்து நாட்களுக்கு மேலாக உடைந்து குடிநீர் வெளியேறி வருகின்றது.

இதனால் கந்தளாய் நகரம், வட்டுக்கச்சி, பேராறு, பேராற்று வெளி, ரஜ ஏல,மற்றும் அனைக்கட்டு போன்ற இடங்களில் வசிக்கின்ற மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

எரிபொருள் இன்மையால் அதனை திருத்துவதிலும் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக கந்தளாய் பிராந்திய நீர்ப்பாவனை பொறுப்பதிகாரி எச்.எம் ரஞ்சித் ஹேரத்திடம் கேட்ட போது,

மக்களுக்கான அத்தியாவசிய தேவைப்பாடுகளில் நீர் மிகவும் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது.

இருந்த போதிலும் சில நாட்களாக கந்தளாய் அனோமா சந்தியில் உள்ள குழாய் வெடித்துள்ளதால் சில நாட்களாக நீர் வெளியேறி வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

இதனை திருத்தும் பணி சற்று தாமதமாவதற்கு காரணம் எரிபொருள் இன்மையாகும்.

நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு எரிபொருள் இல்லாததால் நீரினை இறைத்துக்கொள்வதிலும் அதனை சீர் செய்வதிலும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், கூடிய விரைவில் சரி செய்து மக்களின் பாவனைக்கு இடையூறு இன்றி குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply