அட்டலுகம சிறுமி மரணம்: விசாரணைகளுக்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் விசேட குழு

கொழும்பு,மே 29

பண்டாரகம, அட்டலுகம சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்றை ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

பொலிஸ் விசாரணைகளுக்கான ஒத்துழைப்புகளை வழங்கும் நோக்கில் விசேட குழுவை ஈடுபடுத்தவுள்ளதாக அதிகார சபையின் தலைவர், கலாநிதி உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பண்டாரகம, அட்டலுகம சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் இதுவரை சுமார் 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை.

சிறுமியின் சடலம் தற்போது பாணந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெறுகின்றது.

வெள்ளிக்கிழமை (27) காலை முதல் காணாமல்போயிருந்த பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதான சிறுமியின் சடலம் சனிக்கிழமை (28) பிற்பகல் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

Leave a Reply