கொலை செய்யப்பட்ட சிறுமியின் ஜனாஸா நல்லடக்கம்!

அட்டுலுகம சிறுமியின் இறுதிகிரிகைகள் இன்று இரவு இடம்பெற்றுள்ளது.

சிறுமியின் நல்லடக்கத்தில் பெரும் திரளான முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அட்டுலுகம சிறுமியை தாமே கொலை செய்ததாக கைது செய்யப்பட்டிருந்த 29 வயதுடைய நபர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், கடையில் இருந்து தனியாக வீடுதிரும்பிய சிறுமியை குறித்த சதுப்புநில பகுதிக்கு தூக்கி சென்றதாக விசாரணையில் சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாகவும், இதன்போது சிறுமி மிகவும் அச்சமடைந்ததாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, விடயம் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில் சிறுமியை கொலை செய்ததாக குறித்த நபர் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கபட்டது.

இதன்படி, பிரேத பரிசோதனை அறிக்கையின்படி சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சிறுமி நீரில் மூழ்கடித்து கொலைசெய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், பண்டாரகம – அட்டுலுகம சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அட்டுலுகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு பிரதான சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சந்தேகநபர் கடுமையாக போதைபொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பண்டாரகம பொலிஸ் நிலையத்தின் ஐந்து பொலிஸ் குழுக்கள் இணைந்து தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை சுமார் 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி கடந்த 27 ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமியின் வீட்டின் அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் புதையுண்ட நிலையில் சடலம் பிரதேச மக்களால் கண்டெடுக்கப்பட்டது.

Leave a Reply