எதிர்வரும் ஜூன் மாதம் முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோத்தபாய ரணசிங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இருதய சத்திரசிகிச்சைகளுக்கான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
சராசரியாக, வைத்தியசாலைகளுக்கு நாளாந்தம் நான்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்ற போதிலும் இவை தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து இதய நோயாளிகளுக்கும் தேவையான எனோக்ஸாபரின் தடுப்பூசிக்கு வைத்தியசாலையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, இதய நோயாளிகள் அதிக ஆபத்தில் உள்ளதாக இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோத்தபாய ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது இதய அறுவை சிகிச்சைக்கான பல அவசர மருந்துகள் இல்லை எனவும் கூறப்படுகின்றது.
இந்த மருந்துகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் கிடைக்காவிட்டால் ஏனைய இதய அறுவை சிகிச்சைகளும் தடைபடும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 03 நாட்களுக்குள் அனுப்பட்ட மருத்துவ பொருட்கள் 32 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கொழும்புக்கு எடுத்துச் செல்ல 12 நாட்கள் ஆவதாக விமர்சனம் எழுந்துள்ளது.