
புல்மோட்டை- 04ம் வட்டாரம் மருதங்குள விவசாய சம்மோளனத்திற்குட்பட்ட பாலங்குளத்தில் நீர்கொள்ளும் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் அருகிலுள்ள சின்ன மருதங்குளத்தையும் இணைத்து நீர் விநியோகம் செய்து முற்பகுதி 35ஏக்கர் பிற்பகுதி 35ஏக்கர் என மொத்தம் 70 ஏக்கர் நெற்செய்கை செய்வதென புல்மோட்டை கம நல அபிவிருத்தி உத்தியோகத்தரின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற 2022-03-02ஆம் திகதிய சிறுபோகக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதற்கமைவாக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பாலங்குளத்து நீர் முடிவடைந்ததையடுத்து சின்ன மருதங்குளத்திலிருந்து தமது விவசாயத்திற்காக பிற்பகுதி விவசாயிகள் நீரைக்கோரிய போது பாலங்குளத்திலிருந்து பிற்பகுதி 35 ஏக்கருக்குமான நீரை பெறுவதென தீர்மானிக்கப்பட்டதாக மாற்றி எழுதப்பட்ட கூட்டத்தீர்மானத்தை விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டதனால் விவசாயிகள் திகில் அடைந்தவர்களாக புல்மோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்த போது கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் 15 நாட்களாக கடமையில் இல்லாத காரணத்தால் விவசாய சங்க நிருவாகிகளுடன் பொலிசார் சமரசப் பேச்சில் ஈடுபட்டு ஒரு தடவை நீர் விநியோகிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது அதனையடுத்து இதுவரையிலும் நீர் விநியோகிக்கப்படாததால் நெற்செய்கை முற்றாக அழிவடைந்து காணப்படுகின்றது.
அழிவடைந்து செல்லும் விவசாயத்திற்கு நீர்பாய்ச்சுவதற்கு விவசாய சங்கத்தின் 08 உறுப்பினர்கள் முயற்சிகளை மேற்கொண்ட போது அம்முயர்ச்சியை முறியடித்து வட்டசேவையாளருக்கு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கடிதம் வளங்கியிருந்தார்.
இதற்கிடையே நீர்பாய்ச்சப்ப்டாத வயலுக்கப்பாலுள்ள சிலரது செல்வாக்கைப்பயன்படுத்தி அவர்களது வயலுக்கு மாத்திரம் நீர் விநியோகிக்கப்பட்டதை அறிந்து தமது வயலுக்குமான நீரைப்பெற்றுத்தரக்கோரி 04ம் வட்டார கிராம சேவையாளர் ஜனாப் அபுல் கசன் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் நவ்பர் புல்மோட்டை கமநல சேவைகள் நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் ஜவாத் கம நல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் றனூஸ் மற்றும் விவசாய சங்க நிருவாகிகள் என பலரையும் அழைத்துச் சென்று நீர் விநியோகத்திலுள்ள பாகுபாட்டினை காண்பித்போது மீண்டும் மூன்று ஏக்கருக்கு மாத்திரம் நீர் விநியோகிக்கப்பட்டதுடன் நிறுத்தப்பட்டதைத்தவிர தமக்கான நியாயம் கிடைக்காததால் விவசாயிகள் பெரிதும் அதிருப்தியிலுள்ளனர்.
சட்டபூர்வமான நெற்செய்கைக்கு பயிர் காப்புறுதி பெறப்பட்டுள்ளதுடன்அரச மானிய சேதன உரங்கள் வழங்கப்பட்டும் அதற்கான பற்றுச்சீட்டுக்கள் இன்னும் வழங்கப்படாதுள்ளதானது விவசாயிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றி எழுதப்பட்ட சிறுபோகக் கூட்டறிக்கையில் விவசாய போதனாசிரியர் கிராம சேவையாளர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் என எவரது கையொப்பங்களும் இல்லாததால் அது தொடர்பில் தமக்குத்தெரியாதென அவர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நீர் கொள்ளவில்லாத குளத்தைக்குறிப்பிட்டு பாமர விவசாயிகளை 35 ஏக்கர் நெற்செய்கைக்கு அனுமதித்து விவசாயிகள் கடன்பட்டு முதலீடு செய்ய வைத்து இரசாயன உரங்கள் களை பூச்சி நாசினிகள் காவல் வேலி உளவு கூலி விதை நெல் என பல இலட்சங்கள் செலவு செய்ய செய்து நட்டமடைவதற்கு முழுக்காரணமாக இருந்து தனது கடமையை உதாசீனம் செய்த புல்மோட்டை கம நல அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களே பொறுப்புக்கூற வேண்டும் என விவசாயிகள் தெரிவிப்பதோடுகுளத்தின் நீர் கொள்ளளவு தொடர்பாக திருகோணமலை கம நல அபிவிருத்தி திணைக்கள தொழில் நுட்ப உத்தியோகத்தர்களின் அறிக்கை பெறப்படாமை ஏன் எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
இச்செயற்பாட்டினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு தமக்கு நஷ்டஈடு பெற்றுத்தருமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.





