
கொழும்பு, ஜுன் 06
கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையிலுள்ள சிறுவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மாதிரி பரிசோதனையின்போது 11 சிறுவர்கள் போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு தேவையான போதியளவு ஊட்டச்சத்து இல்லாமையே இதற்கு முக்கிய காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் மருத்துவமனையில் 53 குழந்தைகளை பரிசோதித்தோம், அவர்களில் பாதிப் பேர் ஆபத்தான நிலையில் இருந்தனர். கடந்த காலத்தில் நாங்கள் மேற்கொண்டிருந்த சில அவதானிப்புகளின் காரணமாக நாங்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்வதற்கு விரும்பினோம்.
குழந்தைகளுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகளான கார்போஹைட்ரேட், புரதச் சத்து, கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் இல்லாமையே இதற்கு காரணமாகும். இவை குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.





