தமிழர்களுக்கு நீதி கிடைக்காத ஒரு நாட்டிலே தன் மகனுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்ந்து சாவைத் தழுவிக் கொண்ட அன்னை விக்னேஸ்வரநாதன் வாகீஸ்வரி அவர்களின் இழப்புக்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் இழப்பால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் முக்கியமாக தன் அன்னையை அரவணைக்கும் பாக்கியத்தை சிங்கள அரசின் கொடூரத்தால் இழந்து நிற்கும் விக்னேஸ்வரநாதன் பார்த்திபனுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து நிற்கின்றோம்.
அதேவேளை இத்துயர சம்பவத்திற்கான கண்டனத்தை உலகிற்கு தெரிவிக்கும் வகையில் 19.06.2022 ஞாயிறு அன்று வட-கிழக்கு சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்திருக்கும் கண்டனப் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என்று எம் தமிழ் உறவுகள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோளை வைக்கின்றோம்.
மரணதண்டனை விதிக்கப்பட்ட சிங்களவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் பெருந்தன்மை கொண்ட அரச தலைவர்களால் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யமுடியாமல் இருப்பது தமிழர் தொடர்பில் அரசின் இனவாத போக்கினை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
இந்நிலையில் தமிழ் அரசியல் தலைமைகள் தமிழர்களின் உரிமைக்காக தமது வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து தமிழ் மக்களை ஓரணியில் திரட்டி உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது.
இந்தளவு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்க கடும் பிரயத்தனம் செய்யும் அரசுக்கும் அந்த சிங்கள அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் சிங்கள மக்களுக்கும் எமது தமிழ்த் தலைமைகள் பிரிந்திருப்பது சாதகமாகவே அமையும்.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து ஓரணியாக செயல்படுவதன் மூலம் காலம் சென்ற வாகீஸ்வரி அம்மாவைப் போல் மேலும் அன்னையர்கள் பிரிவுத்துயருடன் இறப்பதை தடுத்து நிறுத்த முடியும்.
அத்துடன் எந்தவித விசாரணையுமின்றி பொய்யான குற்றச்சாட்டின் பேரில் சிறைகளில் வாடும் சகல தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வழிவகுக்க முடியும்.
பொது மக்களாகிய நாமும் இப்படியான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டு நிற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


பிற செய்திகள்





