நாட்டை மீட்டெடுக்க திட்டம் இல்லை என்றால் நாடாளுமன்றத்தை மூடுங்கள் – விமல், தயாசிறி கோரிக்கை

நாட்டை மீட்டெடுப்பதற்கான எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்றால் நாடாளுமன்றத்தை மூட வேண்டும் என ஆளும் கட்சியின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேட்டுக்கொண்டார்.

இதுவரையில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பேசியே நெருக்கடியை தீர்க்க முயற்சிக்கின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த அரசாங்கம் சர்வகட்சி கட்சி அரசாங்கம் அல்ல என்பதனால் தேசிய சபையை உருவாக்கி, அதன் மூலம் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேட்டுக்கொண்டார்.

இதேவேளை மக்கள் துன்பப்படும் வேளையில் வேண்டுமென்றே இந்த அரசாங்கம் உறக்கத்தில் இருப்பதாக ஆளும்கட்சியின் மற்றுமொரு சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார்.

தனது பொறுப்புக்களில் இருந்து நழுவிச் செல்லும் அரசாங்கம், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத் தவறினால், பொருளாதாரம் சீர்குலைந்துவிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்காக, அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்ட சிலர், ஜனாதிபதியை தவறாக வழிநடித்தியதாகவும் விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார்.

Leave a Reply