இலங்கைக்கு இந்திய அரசாங்கம் முழு ஒத்துழைப்பை வழங்கும்: வினய் குவாட்ரா

கொழும்பு,ஜுன் 23

இலங்கை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு, இந்திய அரசாங்கம் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவாட்ரா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு தொடர்ந்தும் நிதி உதவிகளை வழங்குதல் தொடர்பில், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய விசேட தூதுக்குழு கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று சந்தித்தது.

இதன்போது இந்திய வெளிவிவகார செயலாளர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய கடன் உதவியின்கீழ் எரிபொருள், மருந்து, உரம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலங்கை ஏற்கனவே பெற்றுள்ளது.

அது தொடர்பில் மீளாய்வு செய்த தூதுக்குழு, இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க இந்திய அரசாங்கமும் அரசியல் அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.

கடினமான காலங்களில் இலங்கைக்கு உதவுவதில் இந்திய அரசாங்கம் கணிசமான பங்கை வகிக்கிறது.

அதற்காக இலங்கை மக்களும் அரசாங்கமும் பாராட்டுக்களையும் நன்றியையும் இந்திய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் தெரிவித்துக் கொள்வதாக தூதுக்குழுவினரிடம் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், இயல்பு நிலைக்கு மாற்றவும் இந்திய உதவித்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கை குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடினர்.

இக்கட்டான காலகட்டத்திற்குப் பிறகு நாடு மிக விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று தூதுக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்திய பொருளாதார உறவுகள் தொடர்பான செயலாளர் அஜய் சேத், தலைமை பொருளாதார ஆலோசகர் கலாநிதி வி.ஆனந்த நாகேஸ்வரன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட பலர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply