சம்பள அதிகரிப்பை கோரி நிறுவனத்தின் அதிகாரிகளை சிறைப்பிடித்த ஊழியர்கள்!

புத்தளம் – பாலாவி உப்பு நிறுவன ஊழியர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கணக்காளர் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நால்வரை புத்தளம் பொலிஸார் தலையிட்டு இன்று காலை விடுவித்தனர்.

தமது சம்பளத்தை 10,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரி புத்தளம் – பாலாவி உப்பு நிறுவன ஊழியர்கள் பல நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாக சபை உள்ளிட்ட ஊழியர்களுடன் கடந்த 23 ஆம் திகதி புத்தளம் தொழிலாளர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது முதற்கட்டமாக 5000 ரூபாவை அதிகரிப்பதற்கு உப்பு நிறுவன நிர்வாகம் மேற்படி கலந்துரையாடலில் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, இப்பிரச்சினைக்கு இம்மாதம் 27 ஆம் திகதியுடன் தீர்வுகான வேண்டும் என்று முன்னர் தெரிவித்திரிந்த போதிலும், இந்த உப்பு நிறுவனம் நட்டத்தில் இயங்குவதால் இதனை மூடவேண்டிய நிலைக்கு தாம் வந்துள்ளதாக நேற்று மாலை அந்த உப்பு நிறுவனத்தின் கணக்காளர் ஊழியர்களிடம் தெரிவித்தமையால் பிரச்சினை மேலும் வலுவடைந்தது.

இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள், உப்பு நிறுவனத்தின் பிரதான வாயிலை மூடிவிட்டு, நிறுவனத்திற்குள் இருந்த கணக்காளர், ஊழியர்கள் உட்பட நான்கு நிர்வாக சபை உறுப்பினர்களை குறித்த உப்பு நிறுவன அறைக்குள் தடுத்து வைத்திருந்ததுடன், அனைத்து வாயில்களையும் பூட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, அங்கு சென்ற பொலிஸார் குழு ஊழியர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கணக்காளர் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்களை பாதுகாப்பாக மீட்டு அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply