மட்டு, ஜுன் 27
மட்டக்களப்பு – கொழும்பு வீதி ஊறணி பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் எரிபொருளுக்காக வீதி ஓரத்தில் வரிசையில் காத்திருந்தவர்கள் மீது தனியார் பஸ் மோதியதில் ஐவர் படுகாயமடைந்ததுடன் 5 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன.
இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை (27) அதிகாலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக நேற்று மாலையிலிருந்து கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதி ஓரத்தில் மக்கள் மோட்டார் சைக்கிள்களுடன் மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை 5.00 மணியளவில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றுபவர்களை செங்கலடி பிரதேசத்தில் இருந்து ஏற்றிக் கொண்டு ஆரையம்பதியை நோக்கிச் சென்ற தனியார் பஸ்வண்டி வீதி ஓரத்தில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பஸ் சாரதி பஸ்ஸை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து பஸ்ஸை பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளதுடன் சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்






