
எரிபொருள் நெருக்கடி முழுமையாக தீர்வதற்கு ஓராண்டாவது தேவை. அதுவரையில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகத்துக்கு ‘ரோக்கன்’ நடைமுறை பின்பற்றப்படும். பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நேற்று பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அமைச்சர் காஞ்சன மேற்படி தகவலை வெளியிட்டார். இந்த நடைமுறை குறித்து விளக்கமளித்த அமைச்சர்,
எரிபொருள் பெறுவதற்காக வரிசைகளில் காத்திருப்பவர்களுக்கு, மாற்றங்களை செய்ய முடியாத வகையில் சீல் வைக்கப்பட்ட ‘ரோக்கன்’ வழங்கப்படும். முப்படையினர் மற்றும் பொலிஸார் இதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவர். ‘ரோக்கன்’ வழங்கும்போது, சம்பந்தப்பட்டவர்களின் தொலைபேசி இலக்கமும் பெறப்படும்.
எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருள் வந்ததும், விநியோகிக்ககூடிய அளவான வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்டு, விநியோக சேவை இடம்பெறும். உதாரணமாக 6 ஆயிரத்து 600 லீற்றர் எரிபொருள் வருமானால், வாகனமொன்றுக்கு 30 லீற்றர் வீதம் வழங்கப்பட வேண்டுமெனில் ‘ரோக்கன்’ வழங்கப்பட்ட முதல் 220 பேருக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
கப்பல்கள் வரும்வரை எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருளை வழங்கமுடியாது. எனவே, வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன். ரோக்கனை வாங்கிய பிறகு வீடு செல்லுங்கள் – என்று குறிப்பிட்டார்.





