
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்தியசாலை பணியாளர்களுக்குத் தேவையான பெற்றோலை வழங்குவதற்கு வட மாகாண ஆளுநரும், யாழ். மாவட்டச் செயலரும் உறுதியளித்துள்ளபோதும், வடக்கிலுள்ள 7 சாலைகளில் யாழ்ப்பாணச் சாலை தவிர்ந்த ஏனைய சாலைப் பணியாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப்போன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவர் என்று தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிக்கு வருவதற்கு பெற்றோல் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, வடமாகாணத்தில் உள்ள 7 சாலைகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதென நேற்று தீர்மானிக்கப்பட்டது. வடபிராந்திய சாலை தொழிற்சங்கங்கள்இது தொடர்பான அறிவிப்பை விடுத்திருந்தன.
‘சகலரும் பணிக்குச் செல்வதற்கான பொதுப்போக்குவரத்தை அர்ப்பணிப்போடு மேற்கொண்டு வரும் எமது பணியாளர்கள், பணி நிலையமான டிப்போவுக்குச் செல்ல பெற்றோல் இல்லாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எமது நிலையை எவரும் கணக்கெடுக்கவில்லை. இந்த நிலையிலேயே, எமது பணியாளர்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படும்வரை வடக்கு மாகாணத்தில் உள்ள வ.பி.போ.சபையின் சகல சாலைகளையும் சேர்ந்த அனைத்துப் பணியாளர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளோம்’ என அறிவித்தனர்.
இதனையடுத்து, வ.பி.போ.சபையின் பொது முகாமையாளருடன் பேச்சு நடத்திய, வடக்கு மாகாண ஆளுநர் , யாழ். மாவட்டச் செயலர் ஆகியோர் யாழ் மாவட்டத்திலுள்ள சாலை ஊழியர்களுக்கான எரிபொருளை வழங்க உத்தரவாதமளித்துள்ளார்கள். ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ. 2 ஆயிரம் பெறுமதியான பெற்றோல் இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கிலுள்ள கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு சாலை ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கலை , தான் ஒழுங்கமைத்து வருவதாக வடமாகாண ஆளுநர் உத்தரவாதமளித்துள்ளார்.
இருப்பினும் இந்த உத்தரவாதத்தை ஏற்றுக் கொள்ள தொழிற்சங்கங்கள் மறுத்துள்ளன. முதலில் தமக்கு பெற்றோல் கிடைத்த பின்னரே சேவையில் ஈடுபடுவோம் என்று அவை அறிவித்துள்ளன.
‘உறுதியளிக்கப்பட்டவாறு பெற்றோல் கிடைக்கப்பெற்றால் மாத்திரமே எமது பணிப்புறக்கணிப்பை கைவிடுவோம்’ என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.





