என் பெயரில் உள்ள “தோஷத்தை” எனக்கு “கண்டுபிடித்து” தெரிவித்த நண்பருக்கு நான் தந்த பதில் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் முகநூல் பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வாழ்ந்த காலத்தைவிட இனி வாழப்போகும் காலம் குறைவானது. இதற்குள் இயற்கையாக எவருக்கும் ஏற்படும் இழப்புகளைதான் நானும் சந்தித்திருக்கின்றேனே தவிர விசேட இழப்புகள் ஏதுமில்லை. மற்றபடி நிறைய விஷயங்களை என் வாழ்வில் நான் தேடி பெற்றிருக்கின்றேன். பல விஷயங்கள் என்னை தேடி வந்து அடைகின்றன.
இன்னமும் பல விஷயங்கள், சந்தர்ப்பங்கள், என் வாசல் கதவை இந்நிமிஷம்வரை தட்டிக்கொண்டிருக்கின்றன. நான்தான் பல “வாய்ப்புகளை” கொள்கை மற்றும் நன்னெறி (Ethics) காரணமாக நிராகரிக்கின்றேன்.
எதுவுமே எனக்கு “சும்மா” கிடைக்கவில்லை. அந்த சொர்க்கமே ஆனாலும், “சும்மா” எனக்கு எதுவும் வேண்டாம். குறுக்கு வழி, என் வழி அல்ல. அது நேர்வழி. எவர் அல்லது எவள் என்கூட வந்தாலும், வரா விட்டாலும், வெற்றி நடை போடும், என் தனிவழி. உண்மையில், வாழ்வில் முன்னேற “எண்சாஸ்திரம்”, “மண்சாஸ்திரம்” என குறுக்குவழிகள் கிடையாது.
மனோதிட தன்னம்பிக்கை, நேர்மை, கடும் உழைப்பு, தூரப்பார்வை, துணிச்சல் ஆகியவை இருந்தால் போதும். இவை என்னிடம் எக்கச்சக்கமாக இருக்கின்றன. வேண்டுமானால் எவருக்கும் இவற்றை கடனாகவும் தரலாம். ஆகவே இத்தகைய கருத்துகளை பகிர்வதை நிறுத்துங்கள்.
நான் திடமானவன். இவை என்னை எதுவும் செய்யா. ஆனால் வாழ்கையை வாழ ஆரம்பிக்கும் புதிய இளையோரை அல்லது மனோ திடமற்ற சக மனிதர்களை இவை சஞ்சலப்படுத்தி விடலாம். இதனால்தான் இவ்வளவு விலாவாரியாக பதில் சொல்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்





