மட்டு.ஊறணியில் எரிபொருளுக்காக வரிசையில் நின்றோர் மீது பஸ் மோதி விபத்து: 5 பேர் படுகாயம்

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு – கொழும்பு வீதி ஊறணி பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் எரிபொருளுக்காக வீதி ஓரத்தில் வரிசையில் காத்திருந்தவர்கள் மீது தனியார் பஸ்வண்டி மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்ததுடன் 5 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ள  சம்பவம் இன்று திங்கட்கிழமை (27) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதி ஓரத்தில் மக்கள் மோட்டர்சைக்கிள்களுடன் வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில்  சம்பவதினமான இன்று அதிகாலை 5.00 மணியளவில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றுகின்றவர்களை செங்கலடி பிரதேசத்தில் இருந்து  ஏற்றிக் கொண்டு ஆரையம்பதியை நோக்கி பிரயாணித்த தனியார் பஸ்வண்டி வீதி ஓரத்தில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் மட்டு.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

பஸ் சாரதி பஸ் வண்டியை விட்டுவிட்டு  அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.இந்த சம்பவத்தில் 5 மோட்டர்சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதுடன் மோதிய பஸ் வண்டியை பொலிசார் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளதுடன் சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .

Leave a Reply