சமூக மட்டத்தில் காணப்படும் நெருக்கடி நிலைமையினை தீவிரப்படுத்தி அதனூடாக நாட்டின் தேசிய வளங்களை இந்தியா, அமெரிக்காவிற்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சிக்கிறது.
இந்து-பசுபிக் கண்காணிப்பாளர்களை பகைத்துக்கொள்ள கூடாது என்பதற்காகவே அரச தலைவர்கள் ரஸ்யாவின் உதவியை பெற்றுக்கொள்வதை புறக்கணிக்கிறார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் பிரசார செயலர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இன்னும் ஒருவார காலத்திற்கு எரிபொருள் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடையாது என வலுசக்தி துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டது.
இந்திய கடனுதவி திட்டம் நிறைவடையும் தினத்தை அரசாங்கம் நன்கு அறிந்திருந்தது.இந்திய கடனுதவி திட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முன்கூட்டியதாக எவ்வித திட்டங்களையும் வகுக்கவில்லை.
எரிபொருள் அடங்கிய கப்பல் நாட்டிற்கு எப்போது வருகை தரும் என்று கூட அரசாங்கத்தினால் குறிப்பிட முடியாத நிலைமை காணப்படுகிறது.
எரிபொருள் விநியோக கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது.
தூரநோக்கமற்ற செயற்பாடுகளினால் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.பொருளாதார சவாலை வெற்றிக்கொள்ள அரசாங்கம் எவ்வித திட்டங்களும் கிடையாது.
எரிபொருள் விநியோக கட்டமைப்பு நாட்டின் நாளாந்த செயற்பாடுகளும் முழுமையாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சகல பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றார்.
இன்று எப்பிரச்சினைகளுக்கும் அவர் தீர்வு காணவில்லை மாறாக நெருக்கடிகளின் அறிவிப்பாளராக செயற்படுகிறார்.
தற்போதைய நெருக்கடி பாரதூரமானது.தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் சகல தரப்பினரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர் தனது பொறுப்பை முறையாக செயற்படுத்தாமலிருப்பது நாட்டின் துரதிஷ்டவசமானது என்றார்.
பிற செய்திகள்





