
மட்டக்களப்பு ஊறணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தவர்கள் மீது பஸ் மோதியதில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
எரிபொருள் நிலையத்தில் எரிபொருளுக்காக நேற்று மாலையில் இருந்து கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில் மக்கள் வாகனங்களுடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை அதிகாலை செங்கலடி பிரதேசத்தில் இருந்து ஆரையம்பதியை நோக்கிப் பயணித்த தனியார் பஸ், எரிபொருளுக்காக காத்திருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அத்துடன் விபத்தில் 5 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்ததாகவும், பஸ் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு-கொக்குவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





