இ.போ.ச ஊழியர்கள் தொடர்பில் அதிகாரிகள் கரிசனை கொள்வதில்லை! வட பிராந்திய ஊழியர்கள் குற்றச்சாட்டு

பணிக்கு சென்று திரும்புவதற்கு தமக்கு பெட்ரோல் வழங்கக் கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய ஊழியர்கள் அறிவித்திருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று இடம்பெறுகின்றது.

இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய ஊழியர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாண ஆளுநரும், யாழ்.மாவட்ட அரச அதிபரும் வாக்குறுதி வழங்கிய நிலையில் போராட்டம் கைவிடப்படுகின்றது என சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

அந்த செய்திகளில் உண்மையில்லை. நாங்கள் தொடர்ந்தும் எமது போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

தூர தேசங்களிலிருந்து வருபவர்கள் குறித்த நேரத்துக்குள் அலுவலகத்திற்கு செல்ல முடியாமையால் எங்கள் வரவு கூட விடுப்பாகவே கருதப்படுகின்றது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் புறக்கணிப்பு மேற்கொண்டால் உடனடியாகவே அதிகாரிகள் தலையிட்டு அவர்களுக்கு தீர்வு வழங்குகின்றார்கள்.

ஆனால், கோவிட் காலத்திலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கரிசனை கொள்வதில்லை.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எமக்கு பெட்ரோல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என கூறியுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply