
கொழும்பு,ஜுன் 27
நாட்டில் திருடிய ராஜபக்ஷ குடும்பம் சுதந்திரமாக இருப்பதும், ஆதரவற்ற, ஏழை, வாழ்வுக்காக போராடும் அப்பாவி மக்கள் சிறையில் அடைக்கப்படுவதும் தேசத்தின் மிகப்பெரிய நகைச்சுவையாக உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரகலய போராளிகளை இன்று சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“ராஜபக்ஷ குடும்பம் மக்கள் பணத்தை கொள்ளையடித்தது. அவர்கள் இன்னும் சுதந்திரமாக இருக்கிறார்கள், அதேசமயம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடும் அப்பாவி போராளிகள் கைதிகளாக உள்ளனர். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம், மேலும் இந்த குடும்பமும் அரசாங்கமும் நாட்டை அழிக்க எமது கட்சி அனுமதிக்காது.
பொம்மை ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டும். இலங்கை மக்களின் குரலுக்கும் தேவைகளுக்கும் செவிசாய்த்து அவர்கள் வெளியேற வேண்டும் .
தமக்கு என்ன வேண்டும், பொருளாதாரம் எவ்வாறு புத்துயிர் பெற வேண்டும், யார் நாட்டை வழிநடத்த வேண்டும் என்பதை குடிமக்கள் தாங்களாகவே தீர்மானிக்கட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.





