
உக்ரைன் மீது நில ஆக்கிரமிப்பை நடாத்தி வரும் ரஷ்ய படைகள், தற்போது உக்ரைன் தலைநகர் கெய்வ் நகரை அண்மித்து விட்டதாகவும், தலைநகர் மீது குண்டுகள் விழத் தொடங்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் தலைநகர் கெய்வ் வில் உள்ள ‘கிரீமென்சுக்’ என்னும் பகுதியில் ஆடம்பர அங்காடியொன்றில் சுமார் 1,000 ற்கும் மேற்பட்டோர் பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்த போது ரஷ்ய படைகள் குறிபார்த்து தாக்குதல் நடாத்தியதாக உக்ரைன் பிராந்திய அரச உத்தியோகத்தர் விளாடிமிர் சொலோஹப் தெரிவித்துள்ளார்.
மேற்படி தாக்குதலில் கொல்லப்பட்ட 13 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 58 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவசரப்பிரிவு அதிகாரி தெரிவித்த அதேவேளை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
தனது வழமையான இரவு அறிக்கையை வெளியிட்ட உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, “ஐரோப்பாவிலே மிக மோசமான மனித பேரழிவு தற்போது உக்ரைனில் ரஷ்யாவினால் நடாத்தப்பட்டு வருகின்றது.
கொல்லப்படும் பொது மக்களின் எண்ணிக்கை தற்போது வேகமாக அதிகரிக்கின்றது. மக்களின் குடியிருப்புக்கள் மற்றும் மக்கள் அதிகமாக ஒன்று கூடும் இடங்கள் இலக்கு வைக்கப்பட்டுத் தாக்குதல் நடாத்தப்படுகின்றது. இது படு மோசமான மனித உரிமை மீறல்” என உக்ரைன் அதிபர் தனது தினஅறிக்கையில் தெரிவித்துள்ளார்.





