
சென்னை, ஜூன் 28: இறுதி யுத்தத்தில், ‘தமிழீழ மீட்பு நிதி’ என்ற பெயரில், புலம்பெயர் தமிழர்களிடம் அறவிட்ட பணத்தில் ஒரு பகுதியை பயன்படுத்தியே, சென்னையில் கஜேந்திரன் சொகுசு மாளிகை கட்டி வருகிறார் என சென்னை காவல்துறை மூத்த அதிகாரி தமிழ் வின்.lk யிடம் தெரிவித்தார்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் பனையூர் பகுதியில் கடற்கரையோரமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப் பட்டியல் எம்பி கஜேந்திரன் பிரமாண்டமான வீடு கட்டி வருவது தெரிந்ததே. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 25 கோடிக்கு கட்டப்படும் இந்த வீடு தொடர்பாக , சென்னை காவல்துறையினர் விசாரணைகளை முடுக்கியிருந்தனர். இந்நிலையில், இறுதி யுத்தத்தில், ‘தமிழீழ மீட்பு நிதி’ என்ற பெயரில், புலம்பெயர் தமிழர்களிடம் அறவிட்ட பணத்தில் ஒரு பகுதியை பயன்படுத்தியே இந்த வீடு கட்டப்படுவதாக சென்னை காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் ‘ சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் சுமார் 25 கோடி இந்தியப் பணத்தில், இனம் தெரியாத நபர்களால் மாளிகை ஒன்று கட்டப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து விசாரணைகளை முடுக்கி விட்டோம். அப்போது, இலங்கை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா.கஜேந்திரன் இந்த வீட்டை தனது பினாமிகள் மூலம் கட்டி வருகிறார் என்ற தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து, இந்தப் பணம் நட்டுக்குள் எப்படி கொண்டுவரப்பட்டது என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டோம். அப்போது, 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நடந்த காலத்தில், தமிழீழ மீட்பு நிதி என்ற பெயரில், புலம் பெயர் தமிழர்களிடம் வசூலித்த பணத்தைப் பயன்படுத்தியே கஜேந்திரன் இந்த வீட்டைக் கட்டி வருவது தெரிய வந்தது. சென்னையில் இயங்கும், ‘ஹவாலாக்களின்’ உதவியுடன் இந்தப் பணம் இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சுவிஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து சுமார் 20 கோடியும், கனடாவில் இருந்து 5 கோடியும் இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மாளிகையின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்காக, சென்னைக்கு கஜேந்திரன் பல தடவைகள் வந்துள்ளார். தேவையேற்படின் அவரிடம் விசாரணை நடத்துவோம் என்றார் அவர்.
கடைசி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வெளிநாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்களிடம் “தமிழீழ மீட்பு நிதி” என்ற பேரில், கோடிக்கணக்கான பணம் வசூலிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பிறகு அந்தப் பணத்தை கஜேந்திரன் போன்றவர்கள் சுருட்டியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழீழம் பிடிப்பதாக அப்பாவி இளைஞர்களை உசுப்பேத்திக் கொல்லக் கொடுத்த கஜேந்திரன், தான் போராடி மடியாது, மக்கள் அனுப்பும் பணத்தில், தனக்கு மாளிகை கட்டிவருவது தமிழீழ, புலி ஆதரவாளர்கள் இடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.





