தனியார் பேருந்துகள் இன்று சேவையில் ஈடுபடாது

கொழும்பு, ஜூன் 28: டீசல் இன்மையால் இன்றைய தினம் தனியார் பேருந்து சேவைளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படும் என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உறுதியளித்திருந்தார்.

துரதிஷ்டவசமாக மட்டுப்படுத்தப்பட்ட தரப்பினருக்கே இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் கிடைக்கப் பெற்றது.

இதன்காரணமாக உரிய வகையில் பேருந்து சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இன்று முதல் போதியளவு இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தொடருந்து சேவைகள் வழமை போல தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் தொடருந்து சேவையில் தாக்கம் செலுத்தாது என அந்த திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தொடருந்து போக்குவரத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கட்டுப்பாடுகளால் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவை பாதிக்கப்படாது என அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுல்படுத்த எதிர்பார்க்கும் புதிய பேருந்துக்கட்டண அதிகரிப்பு தொடர்பான கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது

இந்த கலந்துரையாடலில் போக்குவரத்து ஆணைக்குழு, பேருந்து தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Leave a Reply