
கொழும்பு,ஜுன் 29
நாட்டில் எதிர்வரும் 1ஆம் திகதி தொடக்கம் அமுலாகும் வகையில் 30 சதவீதத்தால் பேருந்து பயண கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை நியாயமற்றதாகும் என பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் எதிர்வரும் முதலாம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அது தொடர்பான கலந்துரையாடல் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருந்தது.
இதன்போது, பேருந்து கட்டணத்தை 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கும், ஆகக்குறைந்த கட்டணத்தை 40 ரூபாவாக உயர்த்தவும் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து சங்க சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரயன்ஜித் தெரிவித்துள்ளார்.
எனினும், அவ்வாறான இணக்கம் ஏற்படவில்லை என்றும், உடன்பாடு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை நிறைவுற்றதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கமும் தெரிவித்திருந்தன.
அதேநேரம், அதிகரிக்கப்பட்ட டீசல் விலைக்கு நிகராக தனியார் பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான இன்றைய கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்ததாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
ஏனைய தொழிற்சங்கங்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக குறித்த கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்தாக அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், கடந்த வருடத்தின் நவம்பர் மாதம் முதல் இதுவரையான 7 மாத காலப்பகுதியில் 6 சந்தர்ப்பங்களில் பேருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நவம்பர் மாதத்தில் 20 சதவீதத்தினால் பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.
ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை அனுமதிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
பின்னர், இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 17.44 சதவீதத்தினாலும், மார்ச் மாதத்தில் 15 சதவீதத்தினாலும், ஏப்ரல் மாதத்தில் 35 சதவீதத்தினாலும் பேருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.
அத்துடன் கடந்த மே மாதத்தில் 19.49 சதவீதத்தினால் பேருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 90 சதவீதமாக பேருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 30 சதவீதத்தினால் அதிகரிப்பது தொடர்பான பரிந்துரைகளை நாளைய தினம் போக்குவரத்து அமைச்சு அறிவிக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பு எவ்வித இறுதி தீர்மானங்களும் இன்றி நிறைவுற்றுள்ளதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தொழிற்சங்கங்கள் கோரிய கட்டண அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை நாளை போக்குவரத்து அமைச்சுக்கு அறிவிக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படுகின்ற நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால், பல நாட்களாக, பல கீலோமீற்றர்களுக்கு காணப்படும் நீண்ட வரிசைகளில் குறிப்பிடத்தக்க அளவு குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடியாத நிலை உள்ளது.
எரிபொருள் கையிருப்பு மிகவும் குறைந்த மட்டத்தில் உள்ளமையால், அடுத்த மாதம் 10ஆம் திகதிவரை, அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது.
எனினும், இன்றைய தினம் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில், அத்தியாவசிய சேவைகளுக்காக எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை என இலங்கை கனியவள கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலைய தகவல்கள் தெரிவிக்கின்னறன.





