
வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் காத்தலிங்கம் அண்ணாமலையின் ஊடக சந்திப்பு நேற்றையதினம்(30) யாழில் இடம்பெற்றது.
குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,
எங்களுடைய பிரதேசத்தின் கடல் வளங்கள் இந்தியன் ரோலர்களால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றது. இந்தியன் ரோலர்கள் முல்லை கடலில் வந்து நிற்பதை ஊடகவியலாளர்கள் நேரடியாக பதிவு செய்தனர். இந்நிலையில் இதை விட என்ன ஆதாரத்தை உங்களிடம் தரமுடியும் என தெரிவித்தார்.
அதேவேளை இந்தியன் ரோலர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதை ஏன் கடற்படையினர் கண்டு கொள்ளவில்லை எனவும் அடுத்த கட்டத்தில் நாம் இந்தியன் ரோலர்களால் தொழிலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவின் பிரமுகரான அதாணி என்பவருக்கு எங்களது பிரதேசங்கள் விற்பனை செய்யப்பட்டதாக அறியமுடிவதாகவும் அதோடு எமது கடற் பரப்பும் அவர்களுக்கு விற்கப்பட்டதோ என எண்ணத் தோன்றுவதாகவும் தெரிவித்தார்.
கடல் அவ்வாறு விற்கப்பட்டிருந்தால் நாம் அதாணியுடன் நேரடியாக கதைத்து அவர்களிடமிருந்து நாம் சிறிது இடத்தை வாங்குவதற்கு முயற்சி செய்வோம் எனவும் தெரிவித்த அவர் மனிதர்களாக இலங்கையில் பிறந்த நாங்கள் தற்போது சாதாரண புரொய்லர் கோழி போல எங்களை ஆக்கிய சூழலுக்குள் எங்களை தள்ளியுள்ளனர்.


