
முல்லை, ஜுலை 01
பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான ஆசிரியரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டதுடன் மாணவருக்கு பிணை வழங்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் நேற்று 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்
இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை நேற்று முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில் சந்தேக நபரான ஆசிரியர் இம்மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு மாணவனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது
குறித்த B /645/22 வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகமும் சட்டத்தரணி கௌதமனும் பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் சட்டத்தரணி எஸ் தனஞ்சயனும் முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போது இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிவான், ஆசிரியரை 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபராக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவனை 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்லவும் உத்தரவிட்டார்
இதேவேளை, பொலிஸாரிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் மாணவிகள் சிலர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியமை வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு இரண்டு புதிய வழக்குகள் நீதிமன்றுக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
குறித்த ஆசிரியர் மாணவி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு பொலிஸாரிடம் முண்வைக்கப்பட்ட நிலையில் மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இதனடிப்படையில் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு நேற்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி கௌதமனும் பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் சட்டத்தரணி எஸ் தனஞ்சயனும் முன்னிலையாகியிருந்தனர்
இதன்போது இருதரப்பு வாதங்களையும் செவி மடுத்த நீதிவான் சந்தேக நபரான ஆசிரியரை 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸாரை விசாரணைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.
மேலும், குறித்த ஆசிரியர் 13 வயது மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு பொலிஸாரிடம் முண்வைக்கப்பட்ட நிலையில் மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டபோது மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


