5 சத வீத தனியார் பஸ்களே எதிர்வரும் நாட்களில் சேவையில் ஈடுபடும்

கொழும்பு, ஜுலை 01

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பஸ்கள் எதிர்வரும் நாட்களில் 5 சதவீதமாகவே சேவையில் ஈடுபடுத்தப்படும். பஸ் கட்டணம் குறித்து மாத்திரம் அவதானம் செலுத்திய போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்தன பதவி விலக வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

போக்குவரத்து சேவையில் பஸ்கள் தாராளமாக ஈடுப்படுத்தப்படவில்லை ஆனால் பஸ் கட்டணம் மாத்திரம் நியாயமற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளமை முற்றிலும் தவறானது.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் தற்போதைய பஸ் கட்டண திருத்தம் காணப்படுகிறது.நிறைவடைந்த 6 மாத காலப் பகுதியில் மாத்திரம் எரிபொருள் விலையேற்றத்துக்ககமைய பஸ் கட்டணம் ஐந்து முறைகள் அதிகரிக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply