யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு மேற்கு – கண்ணகி அம்மன் கோவிலடியில் உள்ள வீடிடான்றில் இரண்டரை பவுண் நகை திருட்டு போயுள்ளதாக நேற்று (05) வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
உடன் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் சி.சி.டி.வி பதிவுகள் மூலம் சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.
குறித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தானே நகைகளை திருடியதாகவும், அவற்றில் இரண்டு பவுண் நகை நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும், மிகுதி அரைப் பவுண் நகை தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்து தன்னிடம் இருந்த நகையை பொலிஸாரிடம் கையளித்தார்.
கைது செய்யப்பட்டவர் மூளாய் வேரம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இன்னொரு நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.