
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சுகாதார உதவியாளராகப் பணியாற்றும் பெண் ஊழியர் மீது ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் காட்டுப்பகுதியில் வைத்து இனந்தெரியா திராவகம் (அசிட்)வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதனால் கண்ணில் பாதிப்படைந்த ஊழியர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தூர பிரதேசங்களில் இருந்து வனப்பகுதிகளை கடந்து பணிக்கு வரும் ஊழியர்களை கடும் அச்சத்தில் தள்ளியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்றுமுன்தினம் இரவுக் கடமைகளை நிறைவு செய்து நேற்று அதிகாலை மருத்துவமனையிலிருந்து துணுக்காயிலுள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
ஒட்டுசுட்டான் நகரத்தை தாண்டி மாங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்த போது காட்டுப்பகுதியில் வீதியில் நின்ற இருவர் சுகாதார உதவியாளர் மீது இனந்தெரியாத திராவகத்தை வீசியுள்ளனர்.
கண்கள் பாதிக்கப்பட்ட அவர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்ல முடியாத நிலையில் அருகில் இருந்த ஒரு பொதுக் கிணற்றில் முகத்தை கழுவிய போதும் கண்ணை பார்வை சீராகவில்லை.
சற்றுத் தொலைவிலிருந்த ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்து அங்கிருந்து நோயாளர் காவுவண்டிக்கு அறிவித்து மாவட்ட மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்கைக்காக யாழ்ப்பாணம் மாற்றப்பட்டுள்ளார்.





