திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் நீண்டகாலமாக காணி ஆவணங்கள் அற்ற நிலையில் உள்ள மக்களுக்கு, விரைவாகவும் துரிதமாகவும் காணி ஆவணங்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கோடு, அரச அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு ஒன்று இன்று (01.07.2026) தம்பலகாமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் க. சதிசேகரன் தலமையில் நடைபெற்றது.
இப்பயிலரங்கில், அரச அதிகாரிகள் காணி மீளப்பெற்றுக் கொடுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகள் குறித்து தெளிவூட்டப்பட்டதுடன் கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் காணி வழங்குதல் தொடர்பான பிரச்சினைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.
திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால், செலவிப் பவுன்டேஷள் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் அமுலாக்கப்பட்டு வரும் “காணி உரிமங்களை முறைப்படுத்துவதற்கான வசதியளித்தல்” எனும் திட்டத்தின் கீழ், நிறுவன ரீதியான ஆளுமை மற்றும் திறன் விருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த விழிப்புணர்வுப் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவைகளை வழங்குவதற்காக, அரச அதிகாரிகளின் ஆற்றலை கட்டியெழுப்பும் பல்வேறு செயற்பாடுகளை மக்கள் சேவை மன்றம் இந்த திட்டத்தின் கீழ் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே இப்பயிற்சி நடைபெற்றது.
இவ்வுயர்தரப் பயிலரங்கில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் என 50 பேர் கலந்துகொண்டனர்.
இவர்களுக்கான பிரதான வளவாளர்களாக தம்பலகாமம் உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் மற்றும் காணிப் பிரிவின் காணி உத்தியோகத்தர் எம். இர்ஷாத் ஆகியோர் கலந்துகொண்டு, காணி சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்கி வழிகாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.





