
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆயிரம் நாட்கள் கடந்துள்ளதை நினைவுகூரும் வகையில் விசேட பிராத்தனைகளுக்கு கத்தோலிக்க ஆயர்கள், அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் கொழும்பு பேராயரின் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள, காலி மறைமாவட்ட ஆயர் ரேமன்ட் விக்கிரமசிங்க,
இலங்கையிலுள்ள அனைத்து கத்தோலிக்க ஆயர்களும், குருமார்களும், கன்னியாஸ்திரிகளும், பொது மக்களும் ஜனவரி 14 வெள்ளிக்கிழமையன்று தெவத்தே பசிலிக்காவில் பிரார்த்தனை, ஆராதனைக்காக ஒன்றுகூடுவார்கள்.
ஏப்ரல் 21, 2019 அன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் கடவுளுக்கு முன்பாக நாங்கள் ஒன்றுகூடுகின்றோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தாமதடைந்துள்ளமை தொடர்பில் நாங்கள் வருத்தமடைகிறோம். பாதிக்கப்பட்டவர்கள் உண்மையையும் நீதியையும் விரும்புகிறார்கள்.
இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தாக்குதல்களுக்கு அரசியல் தலையீடுகள் உள்ளதா என்பதை கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.





