யாழ். மாவட்டத்தில் வீட்டில் மருத்துவ பராமரிப்பு சேவைகளை வழங்குவது தொடர்பில் அறிவிப்பு!

யாழ். மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டில் மருத்துவ பராமரிப்பு சேவைகளை வழங்குவது தொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

யாழ். மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் தை மாதம் 18ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு முதல் வீட்டில் இருந்து வைத்தியசாலைக்கு அழைத்து வர முடியாத நிலையில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மோசமடைந்து செல்லும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், படுக்கையில் உள்ள நோயாளர்களுக்கு வீட்டில் வழங்கக்கூடிய மருத்துவ பராமரிப்பு சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

இத்திட்டமானது பருத்தித்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகள் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ்விசேட பராமரிப்பு தேவையானவர்கள் தமக்கு அருகில் உள்ள மேற்கூறப்பட்ட வைத்தியசாலைகளில் ஏதாவது ஒன்றிற்குரிய கீழே வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு காலை 8.00 மணி முதல் மாலை 4.00 வரை அழைப்பதன் மூலம் தமக்கு வழங்கப்பட வேண்டிய பராமரிப்பினை முன்பதிவு செய்ய வேண்டும்.

அதன்பின் அவ் வைத்தியசாலையில் இருந்து மருத்துவ பராமரிப்பு குழுவினர் நோயாளியின் வீட்டிற்கு வருகை தந்து அவர்களுடைய நோய் நிலைமையை ஆராய்ந்து வீட்டில் வழங்கக்கூடிய மருத்துவ பராமரிப்பினை வழங்குவார்கள்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை – 021 226 3262, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை – 021 205 9227, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை – 021 227 1150, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை – 021 221 1660.

இச்சேவை மூலம் அவசர மருத்துவ சேவைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. இச்சேவை மூலம் அவசர தேவைகள் அற்ற பராமரிப்பு மட்டுமே வழங்கப்படும். (உதாரணமாக – உணவு வழங்கும் குழாய், சிறுநீர் குழாய் மாற்றுதல், மருந்து கட்டுதல், வீட்டில் வழங்கக்கூடிய இயன் மருத்துவ சேவைகள் போன்றவை)

அவ்வாறு அந்நோயாளிகளுக்கு அவசர மருத்துவ தேவைகள் ஏற்படின் 1990 அவசர அம்புலன்ஸ் சேவையை அழைப்பதன் மூலம் வைத்தியசாலைக்கு செல்ல முடியும் – என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply