பொரள்ளை தேவாலயத்தில் 13 வயது சிறுவனை பயன்படுத்தி குண்டு வைத்த சூத்திரதாரிகள்

கொழும்பு − பொரள்ளை பகுதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் பல்வேறு தகவல்கள் விசாரணைகளிலிருந்து வெளியாகியுள்ளன.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

இந்த கைக்குண்டானது, தீ ஏற்படும் போது வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் கைக்குண்டை வைப்பதற்காக 13 வயது சிறுவன் ஒருவன் பயன்படுத்தப்பட்டமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும் தெரியவருகையில்,

பொரள்ளை பகுதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்து நேற்று (11) இந்த கைக்குண்டு மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரே இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என்பதும் கண்டறியப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுமார் 16 வருட காலமாக, குறித்த தேவாலயத்திற்கு வருகின்ற நபர் என்பதுடன், கடந்த 9 மாதங்களாக குறித்த தேவாலயத்திலேயே நிரந்தரமாக அவர் தங்கியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கைக்குண்டு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் சிலவும், பாதுகாப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

கைக்குண்டை வைத்ததாக கூறப்படும் 13 வயது சிறுவனை, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர், புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, வாக்குமூலம் பதிவு செய்துக்கொண்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொரள்ளை பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இணைந்து நடத்தி வருகின்றனர்

Leave a Reply