13 இன் கீழான ஒற்றையாட்சித் தீர்வு கோரிக்கையை எதிர்த்து லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்!

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ் உருவான 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல் செய்து தமிழர்களை ஒற்றையாட்சியின் முடக்க முயற்சிகள் இடம்பெறுவதாக கண்டனம் தெரிவித்து பிரித்தானிய தலைநகர் லண்டனில் நேற்று புலம்பெயர் தமிழர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு அருகே ஒன்றுகூடிய புலம்பெயர் தமிழர்கள் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு தமிழ்க் கட்சித் தலைவர்கள் இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்துக்குக் கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

இலங்கையின் ஒற்றை ஆட்சியில் இருந்து விடுபட்ட சுதந்திர அரசே தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இலங்கையில் ஒற்றையாட்சி அரசமைப்பை தமிழர்களிடம் திணிக்கும் சதியில் சில தமிழ் அரசியல்வாதிகள் சுயநல நோக்குடன் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

அரசமைப்பிலுள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான தீர்வுக்கு வழி வகுக்க வேண்டுமென கோரப்படும் ஆவணத்தை தமிழ் கட்சிகள் நீண்ட இழுபறிக்கு மத்தியில் தயாரித்துள்ளன.

இந்தியப் பிரதமரிடம் கையளிப்பதற்காக இந்த ஆவணத்தை இலங்கைக்கான இந்தியத் தூதுவரிடம் கையளிக்கவுள்ளதாக இதனைத் தயாரித்த கட்சிகள் தெரிவித்துள்ளன.

இந் நிலையிலேயே இந்தக் கோரிக்கையை எதிர்த்து புலம்பெயர் தமிழர்கள் நேற்று லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply