
நாட்டுக்கு நன்மையான முடிவுகளை எடுக்க அரசு ஒருபோதும் பின்நிற்காது
அடுத்த தேர்தலில் பாதிப்பு வருமா என்று சிந்திக்காமல் நாட்டுக்கு நன்மையான எந்த முடிவையும் எடுக்க அரசாங்கம் பின்நிற்காதென பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ நேற்று (09) தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்றது. இங்கு உரையாற்றிய போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எதிர்வரும் 03 வருடங்களையும் குழப்புவதே எதிரணியின் நோக்கம். நாம் அதற்கு முகம் கொடுக்க வேண்டுமென்று தெரிவித்த அவர், சதிகளால் அன்றி முடிந்தால் மக்கள் மத்தியில் வந்து சவால்களை வெல்லுமாறு எதிரணிக்கு சவால் விடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
02 வருடங்கள் கொவிட்19 தொற்றுக்கு முகம் கொடுத்தோம். மக்களின் உயிர்களை பாதுகாக்க பாடுபட்டோம். முப்படையினரையும் பொலிஸாரையும் பயன்படுத்தினோம். இதனைத் தடுக்க எதிரணி முயன்றது.மூன்றாவது தடுப்பூசியையும் எடுத்து வந்துள்ளோம். எதிரணி இது பற்றி எதுவும் சொல்வதில்லை. நாட்டை குழப்பவே எதிரணி முயல்கிறது.
விவசாயிகளின் பிரச்சினையை அனைவரும் அறிவர். ஐ.தே.க நீண்ட காலம் நாட்டை ஆண்டாலும் நெல் ஒரு கிலோவுக்கு 12-, 13 ரூபாவே வழங்கப்பட்டது.
நாம் 350 ரூபாவுக்கு பசளை வழங்கினோம். ஒரு கிலோ நெல்லுக்கு 25 ரூபா வழங்கினோம். தற்பொழுது வரலாற்றில் சிறந்த நிவாரணம் எமது ஆட்சியில் தான் வழங்கப்பட்டது.
விவசாயிகளின் பிரதான எதிரி நாமென எதிரணி சொல்கிறது. விவசாயிகளுக்கு அதிக நிவாரணம் வழங்கிய எமது அரசை விவசாயிகளின் பிரதான எதிரியென எதிரணி சொல்கிறது. தடுப்பூசி வழங்கவும் வேண்டும். சுகாதாரத்தை கவனிக்கவும் வேண்டும்.வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் இடமளிக்க வேண்டும். நாட்டுக்கு எதிரான தரப்புக்கு நாட்டை மூடும் நோக்கம் இருந்தது. எதிர்வரும் 03 வருடங்களையும் குழப்புவதே எதிரிணியின் நோக்கம். நாம் அதற்கு முகம்கொடுக்க வேண்டும்.தேவை ஏற்பட்டால் நாமும் வீதிக்கு வருவோம்.மக்கள் மத்தியில் செல்வோம்.
பொய்வழக்குகளை தாக்கல் செய்து கடந்த அரசு எமது அணியினரை சிறையிலடைத்தது. படையினர்,பிக்குமாரைக்கூட சிறையில் அடைத்தனர். படையினருக்கு எதிரான சர்வதேச பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கினர். நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுத்தனர். அரசியலமைப்பு திருத்த செயற்பாட்டில் அரசார்பற்ற நிறுவனங்கள் தான் இருந்தன.
பிரிவினைவாதம் தலைதூக்கியது.தேசிய பாதுகாப்பு பூச்சியமானது. சதிகளால் அன்றி மக்கள் மத்தியில் வந்து முடிந்தால் சவால்களை வெல்லுமாறு எதிரணிக்கு சவால் விடுகிறோம். தேர்தலுக்கு எதிரணி அஞ்சுகிறது. நாடு தொடர்பில் சிந்தித்தே நாம் முடிவுகளை எடுத்தோம். அடுத்த தேர்தலில் தோல்வி ஏற்படுமா என்று சிந்தித்து நாம் ஒருபோதும் முடிவெடுக்கவில்லை.
இறக்குமதித் தடை,சேதனப் பசளை அறிமுகம் என்பவை தொடர்பில் எமக்கு பிரச்சினைகள் வருமென்று தெரிந்தும் அதனை முன்னெடுத்தோம். பாதிப்பு வருமென்று தெரிந்தும் எம்.சி.சி ஒப்பந்தத்தை எதிர்த்தோம். நாட்டுக்கு முக்கியமானதாக இருந்தால் அந்த நிமிடமே முடிவெடுப்போம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. கட்சியின் ஸ்தாபகர் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, அமைச்சர்கள் ,எம்.பிக்கள் உட்பட பெருந்திரளானவர்கள் இதில் கலந்து கொண்டனர்





