
கொழும்பு, பெப் 10: நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலும் இன்று மின்சார விநியோகம் தடைப்படாது என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் செயலாளர் வசந்த பெரேரா கூறுகையில் “மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான எரிபொருளை வழங்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) இணங்கியுள்ளது. இதனால் இன்று நாட்டில் மின்வெட்டு அமல்படுத்தப்படாது. ஆனால், பராமரிப்புப் பணிகள் காரணமான மின்வெட்டு, திடீர் மின்தடைகள் தொடர்பாக எதிர்வு கூற முடியாது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், எதிர்காலத்தில் எரிபொருள் விநியோகம் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே, மின் வெட்டு அமல்படுத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக மாலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
மேலும், தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட பல தரப்பினருடன் இலங்கை மின்சார சபை கலந்துரையாடி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.





