பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா தாக்கல்

கொழும்பு, பெப் 10: பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு வெள்ளிக்கிழமை (11) இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்தில், சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகள் திருத்தப்படுமா என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

இந்த சூழலில், பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என நீதியமைச்சர் தெரிவித்திருந்ததை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர் ஏன் இந்த திருத்த சட்டமூலத்தை தாக்கல் செய்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

எவ்வாறாயினும், சட்டமூலத்தை முதலில் சமர்ப்பித்து பின்னர் விவாதிப்பதே நடைமுறை என வெளிவிவகார அமைச்சர் எடுத்துரைத்தார்.

அவர் மேலும் கூறுகையில் ” இந்த சட்டமூலத்தை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்ய எந்தவொரு குடிமகனாலும் முடியும்’ என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply