
நாடாளுமன்றில் அரசின் முக்கிய அமைச்சர்கள் இல்லை, ஆகவே இங்கு கதைத்து பிரியோசனம் இல்லை என்றே தோன்றுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சபையில் இன்று தெரிவித்துளளார்.
முக்கியமான விவாதங்கள் இங்கு நடைபெறுகின்றன. ஆனால் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் சபையில் இல்லை. இங்கே கதைப்பதில் எந்த பலனும் இல்லை என்றே தோன்றுகிறது.
இங்குள்ள அரசு சார்ந்தவர்களும் தமக்குள்ளேயே கதைக்கின்றனர். நாம் என்ன விவாதம் செய்கின்றோம் என்று அவர்களுக்கு தெரியவில்லை.
பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் அது திருத்தப்படுகிறது என்பது வெறும் கண் துடைப்பு. இன்னமும் சுமார் 400 பேர் இந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது திருத்தப்படுவதாக சொல்லப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தில், முக்கிய விடயங்கள் திருத்தப்பட்டால் அதற்கு மாற்றம் என்று கூற முடியும்.
கட்டாய தடுத்து வைப்பு என்பது அதனடிப்படையில் நடைபெறுகிறது. கைது செய்யப்படும் ஒருவரை நீதிமன்றில் முற்படுத்தினால் அவர் இரண்டு வாரங்களுக்கு தடுத்து வைக்கப்படுவார்.
ஆனால் 12 வருடங்கள் தடுப்பில் உள்ளவர்களை நாம் என்ன சொல்வது. உங்கள் எண்ணத்துக்கு நீதித்துறையில் கை வைத்தால் அதுவும் ஊழல் தான். இதற்கு தீர்வு தருவதற்கு நீங்கள் தயாரில்லை. சர்வதேசத்துக்கு என்ன வேடிக்கை காட்ட வேண்டுமோ அதைத்தான் செய்கிறீர்கள்.- என்றார்.





