
இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் கீழ் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்படுகிறார்கள் என்பது நேற்றிலிருந்து அம்பலமாகின்றது என வடக்கு மாகாண கடற்தொழிலாளர்கள் இணைய தலைவர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இழுவை மடி தொடர்பில் விசேட பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் இந்திய தூதரக அதிகாரி ஒருவர் குறித்த பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டு வர வேண்டாம் என கூறியதற்கு இணங்க அந்த பிரேரணை கைவிடப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கின்றார்.
அதாவது சுய புத்தியில் ஒரு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தனது பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருந்தார். ஆனால் அவர் ஒரு நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு செயற்பட்டதன் காரணமாக நேற்றைய தினம் அந்த நாடு அந்த பிரேரணையை கொண்டு வர விரும்பவில்லை.
அதிலிருந்து ஒன்றை நாங்கள் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. அந்த கட்சியினர் யாருடைய நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுகின்றார்கள் என்று.
இனி வரும் காலங்களில் நாங்கள் யாரையும் நம்ப முடியாது ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருடைய நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றார்கள். அவர்கள் மக்கள் மீது நம்பிக்கையாகவும் விசுவாசமாகவும் செய்பவர்களாக இருந்தால் எந்த ஒரு நாட்டிற்கும் எந்த ஒரு கட்சிக்கும் அடிபணியாது. சுய புத்தியில் செய்யப்பட வேண்டும்.
ஒரு நாட்டுப் பிரதிநிதி பிரேரணையை நிறைவேற்ற வேண்டாம் என கூறியதற்கு இணங்க அந்த பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் கொண்டு வரவில்லை என்றால் அந்த கட்சியினர் இந்திய அரசின் நிகழ்ச்சிநிரலில் செயற்படுகிறார்கள் என்பதை உறுதியாக நம்ப வைக்கின்றது – என்றார்.





