
வவுனியா, பெப் 11: இலங்கையின் 17 ஆவது அரச பல்கலைக்கழகமான ‘வவுனியா பல்கலைக்கழகம்’ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை, தனி அரச பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தி கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் 1 ஆம் திகதி வர்த்தமானி வெளியிடப்பட்டது. அப்போது கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் 1978 ஆம் ஆண்டு இலக்கம் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 வது பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
வவுனியா நகரிலிருந்து சுமார் 10கிமீ தொலைவில் வவுனியா மன்னார் வீதியில் சோபாலபுளியங்குளத்தில் உள்ள பம்பைமடுவில் பல்கலைக்கழக வளாகம் அமைந்துள்ளது. 195 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
சுகாதார அறிவியல் பீடம், மீன்வளர்ப்பு, மீன்வளம் மற்றும் கடல்சார் ஆய்வுகள், இயற்கை வளங்கள், உள்ளிட்ட படிப்புகள் இங்கே தொடங்கப்படவுள்ளன.





