
மன்னார், பெப் 11: இந்தியக் கடற்றொழிலாளர்கள் சட்ட விரோத தொழில் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். இதில், எவ்வித உள்நோக்கமும் இல்லை. எமது மக்களின் நலன்களையும், எமது வளங்களையும் பாதுகாப்பதே தனது ஒரே நோக்கம் என்று கடற்தொழில் அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தினை சேர்ந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் கட்சியின் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கலந்துரையாடலில், கருத்து தெரிவித்த அவர், சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாகவும் கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் போன்றவை தொடர்பாக கட்சி செயற்பாட்டாளர்களுக்கு தெளிவுபடுத்தினார்.





