
எதிர்வரும் நாட்களில் இந்திய பிரதமர் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்துவரும் 13ஆவது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கான சாதாகமாக ஏனைய கட்சிகளும் ஒன்றுசேர்ந்து முன்னெடுக்கவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெட்ணம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று பிற்பகல் மட்டக்களப்பில் உள்ள அவரது அலுலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த கோரிக்கையினை அவர் விடுத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு முழுமையான நஸ்ட ஈடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையினை பொறுத்தவரையில் பல இராஜதந்திர நகர்வுகள் புதிய ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 13ஆவது திருத்த சட்டம் தொடர்பில் இன்று பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
13 ஆவது திருத்த சட்டம் என்பது திம்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஊடாக 88 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டவாக்கம் செய்யப்பட்டு அரசமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சுமார் 33 வருடங்களாக இலங்கையில் இந்த 13 ஆவது திருத்த சட்டத்தின் கீழ் மாகாணசபை முறைமை அமுல்படுத்தப்பட்டு 09 மாகாண சபைகளாக இலங்கையில் இயங்கி வருகின்றன.
இதில் 89ஆவது ஆண்டு 13ஆவது திருத்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட சில அதிகாரங்கள் ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் மாகாணசபைக்கு இருந்த சில அதிகாரங்கள் பிரதேச செயலக உருவாக்கத்தின்போது மத்திய அரசாங்கத்தினால் பறிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக காணி தொடர்பான சில அதிகாரங்கள், சட்டம் ஒழுங்குடன் தொடர்புபட்ட சில அதிகாரங்கள், நிதி, நீதியுடன் தொடர்புபட்ட சில அதிகாரங்களையும் மத்திய அரசாங்கம் தன்வசப்படுத்திக் கொண்டது.
இதேநேரம் வடகிழக்கில் இருந்த தமிழ் தலைமைகள் 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பாக ஒவ்வொரு கட்சிகளும் இயக்கங்களும் ஒவ்வொரு கொள்கையினைக்கொண்டிருந்தது. சில கட்சிகள் 13ஆவது திருத்த சட்டம் தொடர்பாக கருத்துகளை முன்வைத்திருந்த நிலையில் சில கட்சிகள் மாகாணசபை முறையினை அமுல்படுத்த முன்வந்தன.
30.06.2006க்கு முற்பட்ட காலத்தில் பேரினவாத சிங்கள நபரினால் முன்னெடுக்கப்பட்ட நீதிமன்ற வழக்கின் ஊடாக வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட முறைமை தவறு என தீர்ப்பளிக்கப்பட்டு வடகிழக்கு பிரிக்கப்பட்டது.
வடகிழக்கு இணைக்கப்பட்டது தவறு என்று சொல்லாமல், இணைக்கப்பட்ட முறை தவறு என கூறப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் அதனை எதிர்த்து ஒரு வழக்கை தாக்கல் செய்யக்கூட யாரும் முன்வரவில்லை.
வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டு 2008ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபை வேறாகவும் கிழக்கு மாகாணசபை வேறாகவும் தேர்தல் நடத்தப்பட்டது. 2008, 2012 ஆம் ஆண்டுகளில் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின்னர் தேர்தல் நடைபெறவில்லை.
ஆனால் தென்னிலங்கையில் பல இடங்களில் மாகாணசபை முறைமை பலகாலமாக செயற்பட்டு வந்தது. இந்த மாகாணசபை முறைமையினூடாக தமிழர்கள் அனுபவித்த விடயங்களைவிட தென்னிலங்கை மக்கள் மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்தி பல விடயங்களை அனுபவித்தார்கள்.
வடக்கு கிழக்கிலிருந்த அரசியற் தலைவர்கள் மாகாணசபை முறைமையுடன் தொடர்புடைய விடயங்களை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்ற விடயத்தில் பல முரண்பாடுகள் இருந்த நிலையில் மாகாணசபை முறைமையிலுள்ள விடயங்களை முழுமையாக அமுல்படுத்தி அதிகாரத்தை நடைமுறைப்படுத்தக்கூடியவாறு செயல் வடிவம் கொடுக்கப்பட்டதா என்ற கேள்வி நிற்கின்றது.
மாகாணசபை முறைமை அதிகாரங்களை கூடுதலாக பெறவேண்டுமாயின் மாகாணசபைக்குள்ள சில அதிகாரங்களை அமுல்படுத்துவதற்கு பல உபவிதிகளையும் நியதிச் சட்டங்களையும் உருவாக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் உபவிதிகளையும் நியதிச் சட்டங்களையும் உருவாக்குவதற்கு நீதித்துறையை நாடவேண்டிய நிர்ப்பந்தமும் ஆளுநரை நாடவேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தன.
இந்த இரண்டு துறைகளும் மத்திய அரசாங்கத்தோடு தொடர்புடையவையாக இருந்ததால் மத்திய அரசானது தமிழர்களை சந்தேகக் கண்ணோடு பார்த்து வந்ததன் காரணமாக ஆளுநரூடாக செல்கின்ற பல விடயங்களிலும் நீதிக்கு அனுமதி அளிக்கப்படவேண்டிய பல விடயங்களிலும் மத்திய அரசானது அனுமதி வழங்கவில்லை.
ஆனால் மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடிய பல உபவிதிகளையும் நியதிச் சட்டங்களையும் மாகாணத்தில் தயாரிக்கக்கூடிய சூழ்நிலை இன்னும் இருக்கின்றது.
மேல்மாகாணத்தைப் பொறுத்தவரை 60 இற்கும் மேற்பட்ட நியதிச் சட்டங்களை தயாரித்திருக்கின்றார்கள். ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களை பார்த்தால் எத்தனை உபவிதிகளையும் நியதிச் சட்டங்களையும் உருவாக்கியிருக்கின்றார்கள் என்ற கேள்வி இருக்கின்றது.
மாகாணசபையைப் பொறுத்தவரையில் உபவிதிகளையும் நியதிச் சட்டங்களையும் உருவாக்கினால் மட்டுமே கூடுதலான அதிகாரத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
மாகாணசபை முறைமையை நாங்கள் முழுமையாக அமுல்படுத்துவதற்கு கிட்டத்தட்ட 33 வருடங்களாக பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அது கிட்டத்தட்ட கையிலிருக்கின்ற விடயமாகும்.
13ஆவது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் சட்டவாக்கம் செய்யப்பட்ட விடயமாகும். அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட விடயமாகும். கையிலிருப்பதை விட்டுவிட்டு இல்லாத ஒன்றை பெறுவதற்கும் கையிலிருப்பதை தொலைப்பதற்கும் எடுக்கப்படுகின்ற முயற்சிகளை சில தமிழ்த் தலைமைகள் நிறுத்தி தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை பல கட்சிகள் இணைந்து 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை இந்திய அரசாங்கம் சாதகமாக பயன்படுத்துவதற்கு முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்தச் சந்தர்ப்பத்தில் 13ஆவது திருத்தச்சட்டம் சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் இந்திய பிரதமர் மோடிஇலங்கை வரவிருக்கின்றார்.
இந்த சூழலில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பங்களும் நெருங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த மூன்று விடயங்களையும் கருத்திலெடுத்து வடக்கு கிழக்கு தமிழ்த் தலைமைகள் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி எடுத்த 13ஆவது திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்படவேண்டும் என்ற முடிவிற்கு சாதகமாக ஒன்றிணைந்து 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்வடிவத்தை கொடுக்க வேண்டும்.
இந்திய பிரதமரின் வருகையை கவனத்தில்கொண்டு மத்திய அரசாங்கம் எடுத்த சில அதிகாரங்கள், வழங்கப்பட வேண்டிய சில அதிகாரங்கள், நாங்கள் மாகாணசபையை பொறுப்பேற்று அமுல்படுத்த வேண்டிய சில அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு முஸ்தீபுக்குரிய செயல்வடிவங்களை கொடுக்க வேண்டும். அதைவிடுத்து இருப்பதை இல்லாமல் செய்வதற்கு எடுக்கப்படுகின்ற சதிமுயற்சிகளை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். – என்றார்.





