
தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை அரசை கண்டித்தும், தமிழக மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி தமிழக மீன்பிடி படகுகளை இலங்கை அரசு ஏலமிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத மத்திய அரசை கண்டித்தும் இன்று மாலை 4 மணியளவில் ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம்; நடத்தியுள்ளனர்.
இதன் போது 15 நாட்களில் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்படாவிட்டால் தங்களது அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தில்; இருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்களையும் அவர்களது மூன்று விசைப்படகுகளை யும், கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு இலங்கை கடற்படையினர் கைது செய்து மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும், தொடர்ந்து இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதை நிறுத்த வேண்டும்;, தமிழக மீனவர்களின் எதிர்ப்பை மீறி பல கோடி மதிப்பிலான நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை வசம் இருந்த மீன்பிடி விசைப்படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காததை கண்டித்து இன்று சென்னை ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்கள் மற்றும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட சுமார் 300க்கும் மேற்பட்டோர் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ராமேஸ்வரம் ரயில் நிலையம் நோக்கி ரயிலை மறித்து போராட்டம் நடத்த வந்தனர்.
இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் ரயில் நிலையம் முன்பு தடுப்புகள் வைத்து மீனவர்களை தடுத்து நிறுத்தினர்.
அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ரயில் மறியல் போராட்டத்தை கை விடுமாறு கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்த மீனவர்கள் ரயில் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் எதிர்வரும் 15 நாட்களுக்குள் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், இலங்கை அரசால் ஏலமிடப்பட்ட படகுகளை தமிழக மீனவர்களிடம் மீண்டும் திருப்பி தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து படகுகளின் உரிமம் மற்றும் மீனவர்கள்இந்திய பிரஜை இல்லை என குறிப்பிடும் வகையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மீனவர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை ராமேஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்க போவதாக கூறி மீனவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.







