
நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வொன்றினை பெறுவதற்கு, அதன் கடனாளிகளுடன் ஒரு உரையாடலைத் தொடங்குமாறும் கடனைச் திருப்பிச் செலுத்துவதை மறுசீரமைக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் தலைமையிலான குழுவினால் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்கள் மற்றும் மூன்று முக்கிய குழுக்களின் தலைவர்களுடன் இரண்டு சுற்று மூடிய கதவு சந்திப்புகளை நடத்திய சுமந்திரன், இலங்கையில் வெளியாகும் ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்திப்பு தொடர்பாக சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, கடனாளர்களுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் கடன்களை மீள அட்டவணைப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் முன்மொழிவதற்கு கூட்டத்தில் பங்கேற்றவர்களினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், கடன் மறுசீரமைப்பிற்குப் பின்னர் சில அந்நியச் செலாவணி அரசாங்கத்தின் கைகளில் விடப்படும்.
அதனை எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்கள் உட்பட மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை இறக்குமதி செய்ய பயன்படுத்த வேண்டும்.
அத்துடன் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு கடனாளிகளுடன் எந்தவொரு ஏற்பாட்டையும் செய்யும் வேளையில், அரசாங்கத்தின் சமூக நல நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தின் பொது நிதிக் குழுவின் முன்னாள் தலைவர் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.
இரண்டு சுற்றுக் கூட்டங்கள் ஜனவரி 27ஆம் திகதியும் இரண்டாவது கூட்டம் கடந்த வியாழக்கிழமையும் நடத்தப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய ஆகியோர் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.





