அரசாங்கத்துடன் உடன்படபோவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிரடி அறிவிப்பு

இ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் ஆகியவற்றில் 25 சதவீத கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதில் அரசாங்கத்துடன் உடன்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரச்சார செயலாளர் சாந்த பண்டார தெரிவித்துள்ளதாவது, “குறித்த இரண்டு நிதிகளும் ஆறு மில்லியன் தனியார் மற்றும் அரச துறை ஊழியர்களின் கடின உழைப்பின் ஊடாக கிடைக்கப்பெற்ற பணத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

ஆகவே, தொழிலாளர்களின் அரசியல் கட்சி என்ற வகையில், அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

மேலும், பெரிய நிறுவனங்கள் மற்றும் பணக்காரர்கள் மீது 25 சதவீத கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.

ஆனால் இ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் ஆகியவற்றில் கை வைக்க முயலும் அரசாங்கத்தின் முயற்சியை நாங்கள் மன்னிக்க முடியாது.

தனியார் துறை ஊழியர்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வுபெறும்போது, இந்த இ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் ஆகிய சேமிப்புக்கள் மாத்திரமே அவர்களுக்கு இருக்கின்றது.

ஆகவே, நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் மேலதிக வரிச் சட்டமூலத்திற்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வாக்களிப்பது மிகவும் கடினம்.

இதனால் மேலதிக வரிச் சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் விரைவில் கலந்துரையாடி, வருங்கால வைப்பு நிதி மற்றும் நம்பிக்கை நிதியத்திற்கு வரி விதிக்கும் அரசாங்கத்தின் முடிவை மாற்றியமைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர்பார்க்கிறது.

இதேவேளை இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில், 25 சதவீத மேலதிகக் கட்டணமானது பெரும் இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் மற்றும் உயர் வருமானம் ஈட்டுபவர்களுக்கு மட்டுமே என சுதந்திரக் கட்சி கருதியது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply